சென்னையில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் சிக்னல்கள் - காவல் ஆணையர் தகவல்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நாளை முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு வரும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கில் காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாகன தணிக்கை பணிகளையும் இன்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வடபழனி சிக்னல் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் இ-பதிவு பெற்று அத்தியாவசிய பணிகளுக்காக சென்று வருகின்றனர். ஆகையாலே போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. நாளை முதல் அனைத்து சிக்னல்களும் சென்னையில் நடைமுறை படுத்தப்படும் என கூறினார்.
மேலும் போலீசாரிடம் வாகன ஓட்டிகள் தகராறு செய்யும் சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.