ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
டலோர ஒழுங்குமுறை மேலாண்மை விதிகளை மீறி ஜெயலலிதா சமாதி அமைக்கப்பட்டிருப்பதால் அதை தடைவிதிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அரசுக்கும் உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றம் தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கை உயர்நிதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில், அவரது நினைவிடம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இந்த நினைவிடம், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது. நினைவிடம் எழுப்ப மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புதலை பெறவில்லை. நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்குகளை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்திருப்பதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.