வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... இன்று முதல் டிராபிக் சிக்னலை மீறினால் ‘ஓடவும் முடியாது..ஒளியவும் முடியாது’...!
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் என்பது சர்வசாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக சிக்னலை மதிக்காமல் கடந்து செல்வது என்பது தினந்தோறும் பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகிறது. எனவே சென்னையில் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியில் 5 சிக்னல்களில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் போக்குவரத்து செலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிலால் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு, தானியங்கி புரோகிராம் மூலம், செல்லான் அனுப்பும் திட்டம் முதல் முறையாக அண்ணாநகர் உள்ளிட்ட 5 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இதுவரை வாகன எண்களைக் கொண்டு தானியங்கி முறையில் அந்த வாகனத்தின் உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு அபராதத்துக்கான செல்லான் அனுப்புவதில் இருந்த சிக்கல் நீக்கப்பட்டுள்ளது.