டி.ஆர்.பாலு vs எல்.முருகன்..! மக்களவையில் நடந்தது என்ன..?
நேற்று மக்களவையில் திமுகவின் எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் குறித்து முழுவதுமாக தற்போது காணலாம்.
நிகழ்வு
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வழக்கமான அலுவல்கள் நடைபெறுகின்றன.மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி நேரத்தின்போது திமுக - பாஜகவிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டிய நிலையில், மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் குறுக்கிட முயற்சிக்க, திமுக எம்.பி டி.ஆர்.பாலு, “நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள். அமருங்கள். நீங்கள் எம்.பி.யாக தகுதியற்றவர். அமைச்சராக இருக்கத் தகுதியில்லாதவர்” என்று ஆவேசமாகப் விமர்சனம் செய்தார்.
டி.ஆர்.பாலுவின் பேச்சால் கோபமடைந்த பாஜகவினர் வாக்குவாதம் செய்து டி.ஆர்.பாலுவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் பட்டியலின அமைச்சரை டி,.ஆர்.பாலு அவமதித்துவிட்டார் என்று கண்டனம் எழுப்பினர். மேலும், டி.ஆர்.பாலு மன்னிப்பு கேளுங்கள் என கோஷம் எழுப்பினர்.
விளக்கம்
இந்த சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “வெள்ள நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். சம்பந்தமில்லாத அமைச்சரான முருகன் எழுந்து பதில் அளித்தார் என்று குறிப்பிட்டு, தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் பேசும்போது, எங்கள் பேச்சுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு முருகன் செயல்பட்டார் என விமர்சனம் செய்தார்.
தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது, ஓரவஞ்சனையாக நடத்துகிறது என்று சாடி, இதைக் கண்டித்து வரும் 8-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.