ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர் விஜய்யை விசாரிக்க வேண்டும் - திமுக புகார்
tr balu urge sit to summon cm vijay in gem veeramani case: ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர் விஜய்க்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு புகார் அளித்துள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு
பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணி, சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்ற சம்பவத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் குற்றவாளிகளை காப்பாற்ற பல கோடி பணம் கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் பி.சி.தேன்மொழி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பாலு புகார்
இந்த வழக்கில், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவிடம் திமுக எம்பி டி.ஆர்.பாலு புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவில், "கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், 'ஜெம்' வீரமணியை் திமுக பாதுகாத்ததாக பொதுவெளியில் குற்றஞ்சாட்டினார்.

அதே நாளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 'ஜெம்' வீரமணியை திமுக பாதுகாத்ததோடு, அவர் மீதான வழக்கையும் தவறாக முடித்து வைத்ததாகக் கூறினார்.
இதனை தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், 'ஜெம்' வீரமணியை பாதுகாப்பதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் அவரிடமிருந்து 500 கோடி ரூபாய் பெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுவெளியில் இவர்கள் மூவரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மூன்று விதமாக கருத வாய்ப்பிருக்கிறது.
முதலில் அவர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. திமுகவின் மீதும், மற்ற தலைவர்கள் மீதும் அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

இரண்டாவதாக இந்த மூவரிடமும் இந்தக் குற்றம் தொடர்பான மிக முக்கியத் தகவல்கள் உள்ளன. ஆனால் போக்சோ சட்டப்படி அவற்றை விசாரணை அதிகாரியிடம் கொடுக்கவில்லை.
மூன்றாவதாக புலனாய்வு அதிகாரியின் கேஸ் டைரியில் உள்ள விசாரணைத் தகவல்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கிடைக்கிறது. அவற்றை அவர்கள் பொது வெளியில் பரப்புகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரும், இரு அமைச்சர்களும் முன் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை அவர்களிடமிருந்து உடனடியாகப் பெறுவது அவசியமாகும்.
அவர்களிடம் ஆதாரங்கள் உள்ளனவா? இருந்தால், அவற்றை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்காதது ஏன்? விசாரணை தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு எப்படி கிடைக்கின்றன? அவற்றிலுள்ள தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.
சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கோ, மறைக்கப்படுவதற்கோ இடமளிக்காமல் அவற்றை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். அதுதான் விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பொய்யாக முன் வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ, விசாரணை ரகசியங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பொருந்தக்கூடிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பது தான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு . அதேவேளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
ஆகவே, முதலமைச்சர் மற்றும் 2 அமைச்சர்கள் உள்ளிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.