பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை - கேன்சரை உருவாக்கும் ரசாயனம்!
பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சுமிட்டாய்
குழந்தைகள் பெரும்பாலும் விரும்பி உண்ணும் திண்பண்டமாக பஞ்சு மிட்டாய் உள்ளது. குறிப்பாக பிங்க் நிறத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்கிறது.
இந்நிலையில் அதில் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனம் மூலம் புற்று நோய் ஏற்படும் என்பதை புதுச்சேரி மாநில உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாரிகள் உணவின் தரத்தை ஆய்வு செய்ததில் விஷத்தன்மை வாய்ந்த ரோடமின் பி என்ற நிறமி சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
விற்பனைக்கு தடை
தொடர்ந்து, பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களிடம் இருந்து நச்சுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, உரிய லைசென்ஸ் வழங்கப்பட்ட பிறகு தான் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும்,
அதுவரை புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்க்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறமிகள் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.