திருமணம் நடக்க இருந்த நேரத்தில் வீட்டில் நிகழ்ந்த சோக சம்பவம் - கூடலூரில் பரபரப்பு
கூடலூர் அருகே சுற்றுலாப்பயணிகளின் கார் சாலை ஓரத்தில் இருந்த வீட்டில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் தலைச்சேரி பகுதியில் இன்னோவா காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு குன்னூர் சிம்ஸ் பூங்கா, தாவரவியல் பூங்கா என பல்வேறு பகுதிகளை பார்த்து ரசித்து விட்டு அவர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
அவர்கள் பயணித்த கார் கூடலூர் - ஊட்டி சாலையில் டி.ஆர்.பஜார் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட டீ.ஆர் பஜார் சாலையில் இருந்த சத்தியசீலன் என்பவரது வீட்டினுள் கார் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த சத்தியசீலனின் மகள் சாலினி என்ற இளம்பெண் காயமடைந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் காரை ஓட்டி வந்த ஸ்ரீநாத் என்ற ஓட்டுநரும் காயமடைந்தார்.
நேற்று சத்தியசீலனின் மகன் பிரின்சுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இதனிடையே எதிர்பாராத இந்த விபத்து குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.