நீர்வரத்து அதிகரிப்பின் எதிரொலி - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 8 மணி நிலவரப்படி 28 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆற்றில் இறங்கவும், அருவியல் குளிக்கவும் தடைவிதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் படகுகளை இயக்கவும் படகு சவாரி செய்யவும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ராம்பளையம் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல், ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் வருவாய், தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சி, காவல் துறையினர் உள்ளிட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.