ஐபிஎல் தொடரில் இதுவரை சதமடிக்காத டாப்- 5 இவர்கள் தான்...!
என்னதான் ஐபிஎல் தொடர் தொடங்கி 15 சீசன்களை நெருங்கி வந்தாலும் காலம் காலமாக விளையாடிய சில வீரர்கள் இன்றளவும் சதமடிக்காமல் உள்ளனர். அவர்களை பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே கடந்த 14 சீசனில் விளையாடி இதுவரை சதமடிக்காத 5 டாப் பற்றி காண்போம்.
கௌதம் காம்பீர்:
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கௌதம் காம்பீர் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி பல சாதனைகளை படைத்தார். குறிப்பாக கொல்கத்தா அணிக்கு கேப்டன்ஷிப் செய்து அவர் 2 முறை சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தார். மொத்தமாக 154 போட்டிகளில் 4218 ரன்களை அடித்துள்ள அவர் 36 அரை சதங்களும் அடித்துள்ளார். அதிகப்பட்சமாக 93 ரன்களை விளாசியுள்ளார். இவ்வளவு பெரிய கேரியரில் காம்பீர் ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
ராபின் உத்தப்பா:
கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்த ராபின் உத்தப்பா ஆரம்ப கட்டத்தில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதன்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நீண்ட நாட்களாக விளையாடிய நிலையில் அவர் தற்போது சென்னை அணியில் விளையாடி வருகிறார். மொத்தம் 193 ஐபிஎல் போட்டிகளில் 4722 ரன்களை குவித்துள்ள உத்தப்பா இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை.
எம்.எஸ்.தோனி :
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி இந்த பட்டியலில் இடம் பெறுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் பொதுவாகவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் அவர் பெரும்பாலும் கடைசி கட்ட ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து பினிஷிங் செய்வதில் வல்லவர். இவரும் 193 இன்னிங்ஸ்களில் 4746 ரன்களைகுவித்துள்ளார்.
பாப் டுபிளெசிஸ்:
இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் வெளிநாட்டு வீரராக சென்னை அணியில் விளையாடி தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாப் டுபிளெசிஸ் உள்ளார்.இதுவரை 93 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர் 2935 ரன்களை எடுத்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்:
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஆரம்பம் முதலே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர பெரும்பாலான அணிகளில் விளையாடி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். இந்த வருடம் பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள அவர் 192 இன்னிங்ஸ்களில் 4046 ரன்களை குவித்துள்ளார்.