மத்திய அரசின் பாராட்டை பெற்ற தமிழ்நாடு: எதற்காக தெரியுமா?
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பெண்களுக்கான தோழி விடுதி உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசின் பாராட்டு கிடைத்துள்ளது.
மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் மத்திய அரசின் பராட்டுக்கு உரித்தான முக்கிய திட்டங்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தோழி விடுதி திட்டம்
தமிழ்நாடு அரசினால் 2023 ஆம் ஆண்டு வெளியிடங்களில் தங்கி படிக்கும் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ விடுதி திட்டத்தை அறிமுகம் செய்தது.
குறித்த திட்டத்தின் கீழ், 24 மணி நேரமும் பாதுகாப்பு, வைபை உள்ளிட்ட ஹைடெக் வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், தரமான உணவு கொடுக்கப்படுவதுடன் குறைந்த அளவில் மாத வாடகை வசூலிக்கப்படுவதால் பெண்கள் மத்தியில் அந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது.
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் தோழி விடுதிகள் செயல்படுகின்ற நிலையில், குறித்த திட்டத்துக்கு மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

நெய்தல் மீட்சி இயக்க திட்டம்
தமிழ்நாடு அரசினால், கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், நெய்தல் மீட்சி இயக்க திட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
உலக வங்கியின் பொருளாதார உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், 14 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 1069 கிலோ மீட்டர் தூரம் வரையில், கடற்கரையுள்ள நிலையில், இந்த மாவட்டங்களில் ஏற்படும் கடல் அரிப்பு, புயல் மற்றும் கடல் மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்பு, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல், கடல் நீர் மாசுபாட்டை குறைத்தல், வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களை முதன்மையாக கொண்டு இத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்துக்கும் மத்திய அரசு முன்மாதிரியான திட்டம் என்ற பாராட்டை வழங்கியுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்
தொழிற்சாலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீவிரமாக கண்காணித்துவரும் நிலையில், தோல் பதனிடும் ஆலைகள் மற்றும் ஜவுளி அலகுகள் போன்ற சிறு மற்றும் அதிக மாசுபாடு ஏற்படுத்தும் தொழில்களின் தொகுப்புகளுக்குப் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு ஆதரவளிக்கிறது.
இதன் மூலம், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, அது பரிந்துரைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது எனபதால், இந்த திட்டமும் மத்திய அரசின் பாராட்டை பெற்றுள்ளது.

பணவுறுதி ஆவணம் திட்டம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு நேரடியாகப் பரிசுத் தொகை வழங்குவதற்குப் பதிலாக, மாணவர்களின் திறனை மேம்படுத்தி பொருளாதார ரீதியாக ஊக்குவிக்க 3 பிரிவுகளின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை வளர்த்து பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் நோக்கில், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) ரூ.12,000/-, ரூ.15,000/- மற்றும் ரூ.25,000/- என மூன்று பிரிவுகளின் கீழ் கொடுக்கப்படுகின்றது. இந்த திட்டம் குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.