சென்னையில் நிலவும் கடும் பனிக்கும் டோங்கா எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு உண்டா? - அதிர்ச்சி தகவல்
ஜனவரி 14-ம் தேதி ஏற்பட்ட டோங்கா எரிமலை வெடிப்பு உலக அளவில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான தீவுக் கூட்டம்தான் டோங்கா. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் கடல் தேசமாகப் போற்றப்படுகிறது.
சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. இந்த எரிமலைகளில் சில அடிக்கடி வெடிக்கும்.
இந்நிலையில், ஒரு தீவுக்கு அருகே கடல் பகுதியில் உள்ள எரிமலை ஜனவரி 14-ம் தேதி அதிகாலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், அப்பகுதியில் சுனாமி அலை உருவானது. இந்த அலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவின, தலைநகர் நுகு அலோபா நகரின் பெரும்பாலான பகுதிகளில் சுனாமி அலைகள் புகுந்தன.
சுமார் 3 அடி உயரத்தில் சுனாமிப் பேரலை தாக்கிய காட்சிகள் டோங்கா தலைநகர் நுகு அலோபாவில் பதிவாகியுள்ளன. பாகோ நாகோ பகுதியில் 2 அடி உயர சுனாமி அலைகள் ஏற்பட்டன.
சுனாமி அலைக்கு ஒரு வெளி நாட்டவர் உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் டோங்கா எரிமலை வெடிப்பு வருங்காலங்களில் மோசமான இயற்கை பேரிடர் இழப்புக்கு காரணமாகலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
எரிமலை வெடிப்பு காரணமாக வளிமண்டல செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படலாம், உலக அளவில் பனி அதிகரிக்கும் என்றும் சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனிக்கும் டோங்கா எரிமலையின் வெடிப்புதான் காரணம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.
சென்னையின் பனிக்கும், டோங்கா எரிமலை வெடிப்புக்கு தொடர்பு உள்ளதா? என விளக்குறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின், ஜி. சுந்தர்ராஜன்.
'எரிமலை வெடிக்கும்போது வரக் கூடிய தூசி படலத்தால் வளிமண்டத்தில் வெப்ப நிலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் நீடிக்கும். ஆனால் தொடர்ந்து பெரிய அளவில் வெப்ப நிலையை குறைக்குமா என்று கூற முடியாது.
வளிமண்டத்தில் இருக்கும் போலார் வோர்டெக்ஸ் ( துருவங்களிலிருந்து வரும் பனிக் காற்றை கட்டுப்படுத்தும் வளிமண்டல அடுக்கு) கால நிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்படுவதனால்தான் பனியின் அளவு அதிகரிக்கும்.
இதுவே சென்னையில் பனி அதிகமாவதற்கு காரணம். எனவே சென்னையில் பனி அதிகமாவதற்கும், எரிமலை வெடிப்புக்கு எந்த தொடர்பும் இல்லை.
டோங்கா எரிமலை மாதிரி 10 லட்சம் எரிமலைகள் உலகில் உள்ளன. இந்த எரிமலைகள் பெருமளவு வெடித்தால் அதிலிருந்து உருவாகும் தூசி படலத்தால் பூமி இன்னமும் குளிராக வாய்ப்பு உள்ளது.
அதிக எரிமலை வெடிப்பு உண்டானால் சுனாமி அடிக்கடி ஏற்படும். கடலில் தூசு படலம் அதிகரித்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்' என்று தெரிவித்தார்.