சந்தையில் தக்காளி விலை திடீர் சரிவு: கிலோ ரூ.50க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்தது. சமையலில் முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை இந்த மாத தொடக்கத்தில் கிலோ ரூ.25 என்ற அளவில் இருந்தது.
அதிகரித்த தக்காளி விலை
பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கி கடந்த 2 நாட்களாக கிலோ 100 ரூபாயை நெருங்கி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது.
இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிகரித்ததை தொடர்ந்து இல்லத்தரசிகள், ஓட்டல் நடத்துபவர்கள் கவலை அடைந்தனர்.
குறைந்த விலை
தக்காளி விலையை குறைக்க கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 முதல் ரூ.68 வரை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தக்காளி விலை இன்று அதிரடியாக குறைந்து மொத்த விற்பனையில் 1 கிலோ 50 ரூபாய்க்கும் சில்லரை விற்பனையில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனையான நிலையில், இன்று 20 ரூபாய் குறைந்தது. மேலும், புறநகர் பகுதிகளில் தக்காளி கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.70க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேட்டு மார்க்கெட்டுக்கு 1100 டன் தேவை உள்ள நிலையில், இன்று 40 லாரியில் 700 டன் தக்காளி வந்துள்ளது.