அரசாங்கம் இதை செஞ்சா நாங்க 40 ரூபாய்க்கு தக்காளியை விற்க தயார்- வியாபாரிகள் சங்கம்
தமிழகத்தில் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது பொதுமக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியிருக்கிறது . ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதால் தக்காளி இல்லாமலேயே நடுத்தர குடும்ப இல்லத்தரசிகள் கடந்த சில நாட்களாக சமையல் செய்து வரும் நிலையே ஏற்பட்டிருக்கிறது என்று கூறலாம்.
விலை அதிகரிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு, தந்தை பெரியார் தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் வக்கீல் சிவா ஆஜராகி முறையீடு செய்தார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.
பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அங்கு 86 சென்ட் நிலப்பரப்பில் இருக்கும் தக்காளி கிரவுண்டு மைதானத்தில் தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படும் என தன வாதத்தை முன்வைத்து பேசிய வக்கீல் சிவா, கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்த போதிலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை.
இந்த மைதானத்திற்குள் தக்காளியுடன் ஏற்றிவரப்பட்ட 11 லாரிகள் முன்பு நிறுத்தப்பட்டபோது அதிகாரிகள் மைதானத்தை நுழைவு வாயிலை பூட்டி விட்டதால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர்,உயர்நீதிமன்ற உத்தரவின்படி வெளியில் எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை என்பதால் தக்காளி விலையும் தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் தற்போது இந்த மைதானத்தை திறந்தால் வட மாநிலங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும் தக்காளி விலையையும் குறைக்க முடியும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,இதன் மூலம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்த வழக்கை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.