கனமழை எதிரொலி: 1 கிலோ தக்காளி விலை ரூ.120 வரை கிடுகிடு உயர்வு
சென்னையில் சில்லறை விற்பனையாக சந்தையில் ஒரு கிலோ 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால், அங்கிருந்து தக்காளிகளை எடுத்து அனுப்ப முடியாத நிலையில், விவசாயிகள் உள்ளனர்.
இதனால், கோயம்பேடு சந்தைக்கு, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 80 லாரிகளில் சுமார் 4 ஆயிரம் டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வரத்து பாதியாக குறைந்துள்ளது.
இதனால், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.