ஒரு கிலோ 200 ரூபாயை எட்டவுள்ள தக்காளி விலை - தக்காளியா? தங்கமா? இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சென்னையில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை தக்காளியின் விலை கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக காய்கறி மார்க்கெட் வட்டாரத்தில் தகவல் வெளியானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் கோலார் ஆகிய இடங்களில் இருந்து, தமிழக மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த தக்காளியின் வரத்து சரிந்துள்ளது. இதனால், ஒரே மாதத்தில் தக்காளி விலை, இரண்டு மடங்காக அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
அந்த வகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி கடந்த 2 நாட்களாக ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து 100 லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழை காரணமாக ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பால், கடந்த வாரத்தில் பாதிக்கு பாதியாக வரத்து குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வரத்து இருந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 7 லாரிகளும், கர்நாடகாவில் இருந்து இதர லாரிகளிலும் தக்காளி கொண்டு வரப்பட்டன. ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருந்து தக்காளி வரத்து இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தக்காளியின் விலை நாளை கிலோ 200 ரூபாய்க்கு இருக்கும் என கோயம்பேடு மார்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஒரு கிரேடு தக்காளியின் விலையே 3 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காய்கறி விலை உயர்வால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் வியாபாரமும் மந்தமாகவே உள்ளது.
இதுக்குறித்து பேசிய வியாபாரிகள், இன்னும் 2 வார காலத்துக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்றும் மழை தொடரும் பட்சத்தில், விலையை கணிக்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.