20 நாட்களில் 30 லட்சத்திற்கு தக்காளி விற்பனை; கல்லால் அடித்து கொலை - அதிர்ச்சி சம்பவம்!
தக்காளி பயிரிட்டு வியாபாரம் செய்து பணம் சம்பாதித்த விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயி கொலை
தக்காளியின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் 100 முதல் 400 ரூபாய் வரைக்கூட தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போடிமல்லாடினா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட்டு அதை விற்பனை செய்து கடந்த 20 நாட்களில் 30 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் மதனப்பள்ளியின் புறநகர்ப் பகுதியில் கைகள் கட்டப்பட்டு, வாயை துணி வைத்து அடைத்து தலையில் கல்லால் தாக்கப்பட்டு மர்மமான முறையில் ராஜசேகர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
அதிகாலை அந்த வழியே சென்ற பொதுமக்கள் ராஜசேகர் கொலை செய்யப்பட்டு கிடைப்பதைப் பார்த்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ராஜசேகரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் சடலத்திற்கு அருகில் 30 லட்ச ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ததற்கான ரசீது கிடந்துள்ளது.
அதனைக் கைப்பற்றிய போலீசார் ராஜசேகரிடம் இருந்து 30 லட்ச ரூபாய்க்கு தக்காளி வாங்கிய மொத்த விற்பனையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தக்காளிகளை விற்று பணம் சம்பாதித்த ராஜசேகர் மீது சக விவசாயிகளுக்கோ,வியாபாரிகளுக்கோ முன் விரோதம் ஏதும் இருக்கிறதா? அல்லது இவரிடம் பணம் இருப்பது தெரிந்து கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.