தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - இன்று நள்ளிரவு முதல் அமல்
தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்த 48 சுங்கச்சாவடிகள் வழியாக தினமும் சுமார் 65 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.
இதன் மூலமாக, தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக்கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதனால், சுங்கச்சாவடிக் கட்டணங்கள் தவறாமல் உயர்த்தப்பட்டுவருகின்றன. இதனிடையே தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
சுமார் 8-10% வரை அதிகரிக்கும் இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள், அரசியல் கட்சிகள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.