தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தகவல் - ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு
தமிழகத்தில் சென்னை அருகேயுள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் குறுகிய தொலைவுக்குள் அடுத்தடுத்து சுங்கச்சாவடி இருப்பதாக பொதுமக்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர்.சுங்கச்சாவடி கட்டணத்தால் போக்குவரத்து கட்டணம் உயர்வதுடன் அத்தியாசிய பொருட்களின் கட்டணம் அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் ஆங்காங்கே சில நேரங்களில் சுங்கச்சாவடிகளை அடித்து நொறுக்கும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன்தமிழ்நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது என்ற விதியை மீறி பல சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி,60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் 3 மாதங்களில் மூடப்படும். சுங்கச்சாவடிக்கு அருகே வசித்து வருபவர் ஆதார் அட்டையை காட்டினால் அவர்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு பாஸ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனால் வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சென்னையை அடுத்துள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.