தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் - எவற்றுக்கெல்லாம் அனுமதி?
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு பால், பத்திரிகை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் செயல்படும். காய்கறி-மளிகை, இறைச்சி கடைகள், ‘டாஸ்மாக்’ கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவைகள் செயல்படாது. மாநகர பஸ், மெட்ரோ ரெயில் சேவையும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் மட்டும் இயங்கும்.
வெளியூரில் இருந்து தொலைத்தூர பஸ்கள், ரெயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் ஆட்டோ, வாடகைகார்கள் நிபந்தனைகளுடன் இயங்க போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று முகூர்த்தநாள் என்பதால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், வாகன சோதனையின்போது காண்பித்து செல்லலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் ஈடுபட உள்ளனர்.