தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்கம்? அமைச்சர் விளக்கம்!
பனை கள்ளுக்கு விதித்துள்ள தடை குறித்து அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
கள்ளுக்கு தடை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியகோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் கேள்வி பதில் நேரம் இடம் பெற்றது. இதில் கேள்வி எழுப்பிய நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன்,
"பனை மரத்திலிருந்து பனங்கள் இயற்கையாக கிடைக்கிறது. அதில் எந்தவித வேதிப்பொருட்களும் இல்லை. இதனை பனம்பால் என்றும் கூறுவார்கள். அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் கிடைக்கும். தற்போது கள் இறக்குவது தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் பனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பனைபொருளுக்கும் அரசு விற்பனை நிலையம் அமைத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட பனை விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும்.
அமைச்சர் விளக்கம்
பனங்கள் இறக்குவதற்கான தடையை நீக்க அரசு முன் வருமா?,"என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, "ஒரு காலத்தில் பனங்கள் மரத்தில் இறக்கி கொண்டிருப்பார்கள். அப்போது கள் மட்டும் சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த கள்லில் கூட இறக்கும் போது அதில் கொஞ்சம் கலக்க வேண்டியதை கலந்து விட்டால் கள் என்பது போதைப் பொருளாக மாறிவிடும்.
அதெல்லாம் இருக்கக்கூடாது என்று தான் தடை செய்யபட்டது. இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லாமே கிடைக்கிறது. வேறு விதமாக அதை பதநீர் என்று சொல்லிவிட்டு பனங்கள், தென்னங்கள்ளாக மாற்றக்கூடாது என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்டிருக்கிறது," என்றார்.
மேலும், பனை பொருட்களை பொருத்தவரை இணையதளங்கள் வாயிலாகவும், கைபேசி செயலி வாயிலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பனையில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தூரிகைகள், பனை ஓலை விசிறிகள், பாய்கள், பனை ஓலை பொருட்கள் எனவும்,
பல்வேறு இயற்கை வண்ண பூசப்பட்ட மற்றும் பூசப்படாத பொருட்கள் செய்வதற்கு தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பனங்கள் இறக்க அனுமதிப்பது குறித்து வருங்காலத்தில் முதலமைச்சரின் அனுமதி பெற்று முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.