ஆப்கானில் இன்று ஆட்சிப் பொறுப்பேற்கும் தலிபான்கள் - அடுத்து என்ன நடக்கும்? பீதியில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி மூன்று நாட்கள் கடந்த நிலையில், அங்கு புதிய அரசை தலிபான்கள் இன்று அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்கு எதிரான ஷரியத் சட்டத்தை அமல்படுத்தி அவர்களுக்கான உரிமைகளை தலிபான்கள் தட்டி பறித்தனர்.

இந்நிலையில், மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தலிபான்கள், கடந்த கால தவறுகளை செய்யப் போவதில்லை என்றும், மென்மையான போக்கை கடைப்பிடிக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
20 ஆண்டுகால போருக்குப் பின் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறி இருக்கும் நிலையில், இன்றைய மதிய தொழுகைக்குப் பின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தலிபான்கள் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் புதிய அரசில் பெண்களுக்கு இடம் இருக்காது என தெரிய வந்துள்ளது. அதே நேரம், பெண்கள் அலுவலகம் செல்வதற்கோ, கல்வி பயில்வதற்கோ தடை விதிக்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம் மேற்கு நகரமான ஹீரத்தில் மிக அரிய நிகழ்வாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வீதிகளில் இறங்கி தங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர்.
மேலும், புதிய அரசில் பெண்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் தலிபான்கள் அமைக்கப்படவிருக்கும் புதிய அரசில் பெண் உரிமை பாதுகாக்கப்படுமா? கொடூர ஆட்சிக்கு பதிலாக மென்மையான ஆட்சி வழங்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.