தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் மரண வழக்கில் இன்று தீர்ப்பு - உச்சக்கட்ட பரபரப்பு
தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஓமலுrரில் வசித்து வந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜூம் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்ற இளம் பெண்ணும் நட்பாக பழகினர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்த ஆணவக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா திடீரென தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
மேலும் நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30 ஆம் தேதி விசாரணையும் நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்ட நிலையில் முக்கியமான சாட்சிகளான கோகுல்ராஜின் தோழி திடீரென பிறழ் சாட்சியானார்.
இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி வழக்கின் போக்கையே மாற்றின. இதனால் அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் சந்தியூர் வக்கீல் பார்த்திபன் மனு கொடுத்தார். அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்தது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு வந்த போது நாமக்கல் நீதிமன்றத் தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கடந்த 2019 மே 5 ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அங்கு 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி இன்று வழங்கப்படும் தீர்ப்பு நிச்சயம் ஆவணக்கொலைக்கு எதிராக அமைய வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.