இன்று முதல் பள்ளிகள் திறப்பு - மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன.
பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழை பள்ளியில் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு பள்ளி நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.