இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - பதக்கங்களை வழங்குகிறார் முதலமைச்சர்

Chennai 44th Chess Olympiad
By Thahir Aug 09, 2022 03:08 AM GMT
Report

மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கிறது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கிவைத்தார்.

44th chess olympiad

தொடக்க விழாவில் தமிழர்களின் வரலாற்றை விளக்கி நடத்தப்பட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்றுடன் நிறைவு

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அரங்கில் தீவிரமாக நடந்து வருகின்றன.

மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது. 6.30 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது.

அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் கண்கவர் நிகழ்ச்சியாக நிறைவு விழா நிகழ்ச்சி அமையும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பதக்கங்களை வழங்குகிறார்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

M K Stalin

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி, உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள், போட்டியில் பங்கேற்ற வீரர்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.