கலைஞர் கருணாநிதிக்கு இன்று 99-வது பிறந்தநாள்!

M Karunanidhi DMK
By Thahir Jun 03, 2022 04:12 AM GMT
Report

இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. அதன் வளர்ச்சியையும், வரலாற்றையும் எழுத முற்பட்டால் அதில் மறுக்கவோ, மறைக்கவோ இயலாத தலைவர் கலைஞர் கருணாநிதி. இன்று கலைஞர் கருணாநிதிக்கு 99-வது பிறந்த நாள்

50 ஆண்டுகளாக திமுக தலைவர். 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர், எண்ணற்ற புத்தகங்களை எழுதிய எழுத்தாளார், தமிழ்த் திரையுலகில் இவர் படைப்புகள் என இவர் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை.


மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை முன்னெடுத்த கலைஞர், மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர்.

நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி,

கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உயர் கல்வியில் சலுகை போன்ற பல திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

12 வயதில் நாடகங்களை எழுதத் தொடங்கியவர் தனது 92-வது வயதிலும் இராமானுஜர் எனும் தொலைக்காட்சித் தொடருக்காக கதை, வசனம் எழுதினார்.

திருநங்கை, கைம்பெண் என்ற வார்த்தைகளைக் கலைஞரைத் தவிர வேறு ஒருவராலும் தந்திருக்க இயலாது.

திராவிட இயக்கத்தின் கருத்துகளைத் திரைப்படங்கள் வாயிலாக பொதுமக்களிடையே வலுவாகக் கொண்டுசேர்த்தார் கலைஞர்.

தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன் என்ற பராசக்தி திரைப்பட வசனம் போல, கலைஞரின் வாழ்வு பல இடர்களையும் கண்டுள்ளது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என அனைத்துப் பிரதமர்களுடனும்,

பெரியார், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என எல்லா அரசியல் தலைவர்களுடனும் அரசியல் செய்தவர் கருணாநிதி.

கடந்த 70 ஆண்டு தமிழக வரலாற்றில் கருணாநிதியின் வரலாறு நின்று பேசும் என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை!