2வது டி20 போட்டியில் இலங்கையுடன் மோதும் இந்தியா - தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா?
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடக்கிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே 2வது டி20 போட்டி இன்று இமாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் ஃபீல்டிங்கில் சொதப்பிய நிலையில் அதனை இப்போட்டியில் திருத்தி சிறப்பான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியை பொறுத்தவரை சரிவில் இருந்து மீள்வதற்கு முடிந்தவரை கடுமையாக முயற்சிக்கும் நிலையில் கொரோனா பாதிப்பால் ஹசரங்கா விளையாடாதது பின்னடைவாக அமைந்த நிலையில் தசைப்பிடிப்பால் அவதிப்படும் குசல் மென்டிஸ், தீக்ஷனா 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ளது மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இவர்களுக்கு பதிலாக தனஞ்ஜெயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிடவும் அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறியுள்ளது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் விளையாடிய இந்திய அணி அதில் தோற்றது குறிப்பிடத்தக்கது.