இன்று மெகா தடுப்பூசி முகாம் - 30 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமின் போது, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நடைபெறும் 2-வது மெகா தடுப்பூசி முகாமில் 30 லட்சம் பேருக்கு செலுத்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்தமுறை மருந்துகள் தீர்ந்துவிட்ட மையங்களில் தற்போது கூடுதலாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை கூறியுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முகாம் நடைபெறும் நிலையில், சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆயிரத்து 600 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சியின் இணையதளம் மற்றும் மாநகராட்சியின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் கடந்த முறை மூன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த முறை தடுப்பூசி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில், பல இடங்களில் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல, இம்முறை, திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தடுப்பூசி செலுத்துவோருக்கு குலுக்கல் முறையில் ஆன்ட்ராய்டு போன்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.