ஆன்லைன் ரம்மி விவகாரம்; ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Vijayakanth R. N. Ravi Governor of Tamil Nadu DMDK
By Thahir Mar 10, 2023 02:57 AM GMT
Report

உடனடியாக ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

விஜயகாந்த் கண்டனம் 

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்ட தடை செய்யும் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக்குழு அளித்த அறிக்கையின் படி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதனை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.

To Governor Ravi Condemnation of Vijayakanth

ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது

ஆளுநரின் காலதாமதத்தால் ஆன்லைன் ரம்மி விளையாடி தமிழகத்தில் இதுவரை 44 பேர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

முக்கிய பொறுப்புகளில் உள்ள ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா?. ஏற்கனவே 4 மாதகாலம் அதற்கான முடிவை எடுக்காமல் கால தாமதம் செய்ததோடு, மீண்டும் விளக்கம் கேட்டு கால விரயத்தை ஏற்படுத்தாமல், உடனடியாக ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதவை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவதை தடுக்காமல், இனியும் ஆளுநர் காலதாமதம் செய்தால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ததற்கு இணையாக அமைந்து விடும் என தெரிவித்துள்ளார்.