கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா இருங்க... ஐபிஎல் முடிந்தவுடன் காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ் ...
2022 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடப்பாண்டுக்கான 15வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டிகள் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி, நத்தம்-திண்டுக்கல், கோவை மற்றும் சேலத்தில் போட்டிகள் நடக்கவுள்ளது.
திருநெல்வேலியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மோதவுள்ளது. இறுதிப்போட்டியுடன் சேர்த்த மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கவுள்ள நிலையில் சேலம் மற்றும் கோவையில் பிளேஆஃப் போட்டிகளும், ஜூலை 31 ஆம் தேதி கோவையில் இறுதிப் போட்டியும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஎன்பிஎல் தொடர் நகரங்கள் மட்டுமின்றி கிராம அளவிலும் திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்கு உதவிகரமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.