வேதா இல்லத்தை கையகப்படுத்தும் திட்டம் இல்லை : நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
முன்னாள் முதகமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் திட்டம் இல்லை என தமிழக அரசு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதனை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கிய அதிமுக அரசு, வேதா இல்லத்தை அரசுடமையாக்கப்பட்டு அரசாணை வெளியிட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் வேதா நிலையத்தின் சாவியை தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்படுவதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது