மக்களை சென்றடையும் மகத்தான திட்டம்... கிருஷ்ணகிரியில் இன்று அறிமுகம்...
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் மாதம்தோறும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் பல்வேறு காரணங்களால் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் மரணமடைகின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு இத்தகைய நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீட்டுக்கே சென்று மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவது, டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிப்பது, பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் பிசியோதெரபிஸ்டுகள் மூலம் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிப்பது ஆகியவற்றை தமிழக அரசு தொடங்க உள்ளது.
இந்த திட்டத்திற்கு மக்களைத் தேடி மருத்துவம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தனி விமானம் மூலம் ஓசூர் சென்றடைந்தார். சூளகிரி அருகே உள்ளே சாமனப்பள்ளி கிராமத்தில் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்து சில வீடுகளுக்கு நேரில் சென்று மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்.
மேலும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
முதல்வர் வருகையையொட்டி ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.