கோயில்களின் நில உரிமை ஆவணங்களை இணையதளத்தில் வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களுக்குச் சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன.
இந்த நிலங்களின் உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவை வருவாய்த்துறையின் ஆவணங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என 3 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதற்கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுமையாக வருவாய்த்துறையின் ஆவணங்களுடன் ஒத்துப்போகின்றன. இந்த விவரங்கள் அனைத்தும் www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.