நெருங்கும் கோடைக்காலம் - கூல்டிரிங்ஸ் குடிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை
பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குளிர்பான நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி அடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெளியே செல்லும் நம்மில் பலரும் வெலியில் இருந்து இளைப்பாற குளிர்பானங்களை பருகுவது வழக்கம்.
அப்படியான பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சில நிறுவனங்களின் குளிர்பானங்கள் காலாவதியாகி உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் குளிர்பான நிறுவனங்களுக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது.
மேலும், தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கடந்த பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 5,777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில்,634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் தொடர்ச்சியாக ரூபாய் 9.02 இலட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கடைகளில் எடுக்கப்பட்ட குளிர்பானங்களின் மாதிரிகள் உணவு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\
மேலும் குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து நிலைகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் – 2011 இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.