பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

tneducation பள்ளிக்கல்வித்துறை
By Petchi Avudaiappan Nov 12, 2021 11:42 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் - மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. 

அந்த வகையில் கடந்த ஆட்சியின் போது அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டது.

இதனை சரிசெய்யும் வகையில் ’இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இதற்காக தன்னார்வலர்கள் பலரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு மாணவர்கள் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்  பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மற்றொரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்  தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் என அனைவருக்கும் 15 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியை அடிப்படையாகக் கொண்டு சம்பள உயர்வை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் நவம்பர் ஒன்றாம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு சம்பள உயர்வு அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.