மின்சாரத்துறைக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன் - வெளியான வெள்ளை அறிக்கை
கடந்த வாரம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு மின்வாரியத்தின் நிதி மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார்.

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை
இந்த வெள்ளை அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளில் மின்வாரியத்தின் வருவாய் மற்றும் செலவு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், "தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 2001 ஆம் ஆண்டில் ரூ. 6,492 கோடியாக இருந்த கடன் தற்போது ரூ.2.47 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

2001 - 2006 ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் வருமானம் ரூ.59,084 கோடியாகவும், செலவு ரூ.67,439 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.8,355 கோடியாகவும் இருந்துள்ளது.
இது, 2021 - 2026 ஆட்சியில் மின்வாரிய வருமானம் ரூ.4.97 லட்சம் கோடியாகவும், செலவு ரூ.5.32 லட்சம் கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.34,447 கோடியாகவும் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.87,000 கோடி கடனாக வாங்கியிருக்கின்றனர். TNEBயில் புதிதாக எதுவும் செய்யவில்லை. மின்சாரத்துறையில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வாங்கவில்லை, முந்தைய ஆண்டுகளில் செய்ததை தான் செய்துள்ளனர். ஆனால், ரூ.51,000 கோடி செலவுகள் அதிகமாகியுள்ளது.
மின் துறைக்கு 1,40,635 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், நம்மிடம் 74,714 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 65,921 காலிப்பணியிடங்கள் இருக்கிறது.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 343 பேரை மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளனர். தமிழ்நாடு மின்சாரத்துறையில் பணியாளர் நியமனத்தில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளோம். இந்தாண்டிற்குள் 20,000 பேர் புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.