விஜய் கூட்டத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதா? மின்வாரியம் விளக்கம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மின்வாரிய தலைமை பொறியாளர் விளக்கமளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின், கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்திருந்துள்ளனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
விஜய் பேசும் போது வேண்டுமென்றே மின்சாரம் நிறுத்தப்பட்டது என சிலர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், இந்த நிகழ்வு குறித்து மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி விளக்கமளித்துள்ளார்.
மின்வாரியம் விளக்கம்
இது தொடர்பாக பேசிய அவர், "தவெக தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் செய்தபோது தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது.
அவரின் பிரச்சாரத்தின்போது வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெருவிளக்குகள், கடைகளில் வெளிச்சம் இருப்பது தெளிவாக தெரிகிறது.
தவெகவினர் வைத்திருந்த ஜெனரேட்டர்கள் மற்றும் விளக்குகள் கூட்ட நெரிசலால் அணைந்தது.
விஜய் வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என பாதுகாப்பு கருதி, தவெகவினரே மின் இணைப்பு துண்டிக்க வலியுறுத்தி செப்.26 அன்று கடிதம் கொடுத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை மின்வாரியம் மறுத்துவிட்டது.
விஜய் வருவதற்கு முன்பு தொண்டர்கள் மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்ததால் அவர்களை கீழே இறக்கவதற்காக சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. விஜய் பேசும்போதும் மின்சாரம் தடை செய்யப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.