காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய இளைஞன் - சேர்த்து வைக்க கோரி இளம்பெண் மகளுடன் தர்ணா!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அத்திதாங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரின் 24 வயதான் மகள் திவ்யாவும் பக்கத்து ஊராண கரிக்கந்தாங்கள் கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவரின் 25 வயது மகன் அரிகிருஷ்ணனும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக திவ்யா கர்பம் தரித்துள்ளார். இந்தநிலையில் ஹரி கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் திவ்யாவை திருமணம் செய்வதற்கு சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் திவ்யா மற்றும் அவரது உறவினர்கள் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து ஹரி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து அந்த வழக்கானது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து நான்கு வயது பூர்த்தியடைந்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்கில் கடந்த மாதம் ஆஜராகிய ஹரிகிருஷ்ணன் திவ்யாவை திருமணம் செய்து குழந்தையும் ஏற்றுக்கொண்டு வாழ்வதாக நீதிபதியிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தற்போது திடீரென ஹரி கிருஷ்ணனுக்கு அவரது உறவினர்கள் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டு வருவதை அறிந்த திவ்யா அவரது நான்கு வயது பெண் குழந்தையுடன் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகார் அளித்து ஒரு வார காலம் ஆகியும் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த திவ்யா அவரது நான்கு வயது பெண் குழந்தையுடன் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வலாகத்தில் தரையில் அமர்ந்து,
தன்னை காதலித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கி தற்போது திருமணம் செய்ய மறுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய தயாராக உள்ள அரிகிருஷ்ணன் மீதும் மற்றும் அவரது உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தன்னுடைய வாழ்க்கைக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திவ்யா திடீரென மயக்கம் அடைந்தார். இதனையடுத்து பணியில் இருந்த காவலர்கள் திவ்யாவிற்கு தண்ணீர் கொடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் திவ்யாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.