நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் நாளை முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படவுள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் 27 மாவட்டங்களில் நாளை முதல் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இதனை தொடர்ந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புவேலி அமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மதுபான கடைகளில் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் நாள் ஒன்றிற்கு இரண்டு முறை பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மது வாங்க வரும் நபர்கள் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டம் வரைவதோடு, ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.