தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு - அதிர்ச்சியில் மதுபிரியர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடக்கவுள்ளது.
மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்கு போட்டியிட 14,701 வேட்புமனுக்களும், நகராட்சியில் உள்ள 3,843 இடங்களுக்கு 23,354 வேட்புமனுக்களும், பேரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36,361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பிரச்சாரங்களும் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.