பூட்டான் டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்: உதவி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை
பூட்டானில் நடக்கும் டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என டேக்வாண்டோ வீரர் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழவு அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் எலக்ட்ரீசியன் ரமேஷ் என்பவர் மனைவி சிவ யோகேஸ்வரி, மகன் ஹரிசெல்வன் ஆகியோருடன் வசித்து வருகிறார். ஹரிசெல்வன் கோவை அரசு கல்லூரியில் 3 ம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு டேக்வாண்டோ என்ற விளையாட்டு பிரிவில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இதனை தீவிரமாக கற்று தேர்ச்சி பெற்றார்.
மேலும் பல போட்டிகளில் வென்று பதங்கங்களையும் பெற்றுள்ளார். கராத்தே போன்றே இந்த போட்டி இருந்தாலும் டேக்வாண்டோ என்பது கொரியாவில் அறிமுகமான தற்காப்பு கலை, இந்த போட்டியில் கால்களை அதிகம் பயன்படுத்தி தாக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் ஹரிசெல்வன் தங்க பதக்கம் வென்றார்.
இதன் மூலம் பூட்டானில் நடக்க உள்ள தெற்காசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.கடந்த முறை நடைபெற்ற போட்டியில் பங்கேற்க இவரின் தாயார் சிவயோகேஸ்வரியின் நகைகளை அடகு வைத்து அந்த பணம் மூலமே சென்றதாகவும் தற்போது பூட்டான் செல்ல 40 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும், தனக்கு தமிழக அரசு உதவி செய்தால் நிச்சயம் பதக்கம் வெல்வேன் எனவும் கூறி பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது கோரிக்கை மனுவினை அளித்தார்.