“நாப்கின்கூட இல்லாமல் கஷ்டப்படுறோம்” - உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவிகளின் நிலை
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக விரைந்து மீட்க ஆப்ரேஷன் கங்கா மூலம் ருமேனியா, ஹங்கேரி, போலாந்து எல்லை வழியாக மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பல்வேறு வீடியோ பதிவுகளில் தங்களின் நிலை குறித்து விவரித்து உதவுமாறு மத்திய மாநில அரசை கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் சிக்கியுள்ள தமிழக மாணவிகள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவில்,
“உக்ரைன் நாட்டில் கார்கிவ், கீவ் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது, நாங்கள் தங்கியுள்ள பகுதியில் 15 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை குண்டு போடப்பட்டு வருகிறது.
அந்த சத்தத்தால் நாங்கள் பயத்துடன் பதுங்கி இருக்கிறோம்.” மேலும், “கார்கிவ் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் உணவு, தண்ணீர் வாங்கமுடியாமல் சிரமப்படுகிறோம்.
இன்று கடைகள் திறந்ததால் குடிநீர், உணவு, நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் வாங்கக் கடையில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தபோது
ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதால் பயத்தில் மீண்டும் விடுதிக்கே திரும்பி வந்துவிட்டோம்” என மாணவிகள் தெரிவித்தனர்.
கார்கிவ் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாகவும் அவர்கள் நாப்கின்கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும்,
மெட்ரோ ரயில் நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் கழிப்பறைக்குக் கூட செல்லமுடியாமல் அவதிபட்டு வருவதாகவும் மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அச்சத்துடன் இருக்கும் எங்களை தமிழக அரசும், இந்திய அரசும் விரைவாக மீட்க வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.