மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா சென்ற தமிழக அரசு பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சிறப்பு திட்டங்களில் ஒன்றாக கல்வி சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று கல்வி மற்றும் கலாச்சார அனுபவங்களை பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டு 40 அரசுப் பள்ளி மாணவர்கள் 5 நாள் கல்வி சுற்றுலாவாக மலேசியாவிற்கு செல்கின்றனர்.
பிப்ரவரி 9 முதல் 13 வரை நடைபெறும் இந்த பயணத்தில் 2 ஆசிரியர்கள் மற்றும் 2 முதன்மைக் கல்வி அலுவலர்கள் உட்பட மொத்தம் 44 பேர் பங்கேற்கின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர்களை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் இலக்கிய மன்றம், வினாடி-வினா, விளையாட்டு போட்டிகள், கலைத்திருவிழா போன்றவை மாநில அளவில் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி சுற்றுலா வாய்ப்பு வழங்கப்படுகிறது.

2024- 25 கல்வியாண்டில் நடைபெற்ற போட்டிகளில் 155 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களில் முதல் கட்டமாக 40 மாணவர்கள் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மலேசியாவில் மாணவர்கள் பிரபல பல்கலைக்கழகங்கள், அறிவியல் அருங்காட்சியங்கள், நூலகங்கள் ஆகியவற்றை பார்வையிட உள்ளனர்.
மேலும் மலேசியாவில் வாழும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.