தாலுகா ஆஃபிஸ்கள் முடங்கும் அபாயம்; ஊழியர்கள் ஸ்டிரைக் - என்ன காரணம்?
வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய்த்துறை
மாநிலம் முழுவதும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் முருகையன், பொதுச் செயலர் சங்கரலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலை நிறுத்தம்
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் மீது சுமுகத் தீர்வு காணப்பட்டது.
ஆனால் கடந்த 10 மாதங்களாக இந்த முடிவுகளின்படி ஆணைகள் வழங்கக் காலதாமதம் செய்யப்படுவதே இப்போராட்டத்திற்கான முக்கிய காரணம் ஆகும். ஆண்டிற்கு 1 கோடி சான்றிதழ்களை இணையவழியில் வழங்கும் நிலையில், அரசாணையின்படி, வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் (சான்றிதழ்) பணியிடங்கள் வழங்க மறுக்கப்படுகிறது.
"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" சிறப்புத் திட்டத்திற்கு ஒரு முகாமிற்கு ரூ.1 இலட்சம் செலவுகள் ஆகும் நிலையில், இதற்கான நிதி ஒதுக்கீடு, கால அவகாசம் வழங்காததால், கள அலுவலர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தற்போது கூட முக்கிய கோரிக்கைகளை, அரசு உரிய காலத்தில் செய்திருந்தால், வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.