ஓடும் பேருந்தில் சரமாரி அரிவாள் வெட்டு - ராமநாதபுரத்தில் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு கும்பல் கொலை செய்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்றுவரையும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மணிகண்டன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, பேருந்து மூலம் மதுரைக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்து பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடியில் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று பேருந்தை வழிமறித்தது.
பேருந்தின் உள்ளே சென்ற அந்த கும்பல், அதிலிருந்த பழனிக்குமார், வழிவிட்டான், அழகு முருகன், முத்துமுருகன் ஆகிய 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
இதில் பலத்த காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.