குறைந்த நிவாரண நிதி : தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

admk dmk mkstalin tngovernment opanneerselvam
By Petchi Avudaiappan Nov 14, 2021 07:19 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 மழை பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குறைந்த நிவாரண நிதி வழங்குவதை ஏற்க முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, 11-11-2021 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்ததன் விளைவாக 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அவர்களுக்கு  என் சார்பிலும்,அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில், 'நிவர்' புயல் உருவாகி கனமழை ஏற்பட்ட சமயத்தில் உயிர்ச் சேதத்தை தடுக்க கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதும், எதிர்பாராத விதமாக புயல் மற்றும் கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு பேரிடர் 'நிவாரண நிதியிலிருந்து நான்கு இலட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஆறு இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

அதே சமயத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாகியதையடுத்து அண்மையில் பெய்த கனமழை காரணமாக பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய காற்றழுத்த தாழ்வினை ஒப்பிடும்போது, நிவர் புயலின் தாக்கம் பன்மடங்கு அதிகம். இருப்பினும் உயிரிழப்பு குறைவு. ஆனால் தற்போது தாக்கம் குறைவு, உயிரிழப்பு அதிகம். இதற்குக் காரணம், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வுதான் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாட்களுக்குள் தலா நான்கு இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கிறார்.

ஏற்கெனவே, ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிற நிலையில், தற்போது 4 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.எனவே. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க உத்தரவிட வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.