சிறுவனை காப்பாற்றிய தஞ்சாவூர் காவலருக்கு பிரதமரின் உயிர் காக்கும் விருது!
பிரதமரின் உயிர்காக்கும் விருது தனக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தஞ்சையை சேர்ந்த காவலர் ராஜ் கண்ணா தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தென்னமநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணா. இவர், தற்போது பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திவான், தீரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தஞ்சை ஆயுதப்படை காவலராக பணியாற்றிய போது அப்போதைய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தர்மராஜ்க்கு (கன்மேன்) பாதுகாவலராக பணியாற்றி வந்தார். அப்போது தென்னமநாட்டிலிருந்து தஞ்சாவூரில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வழியில் தஞ்சை நகர பகுதியில் உள்ள கல்லணை கால்வாயில் வேளாங்கண்ணிக்கு நடைபயணமாகச் சென்றுகொண்டிருந்த குடும்பத்திலிருந்து ஒரு சிறுவன் படித்துறையில் இறங்கியபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
அதை அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பணிக்கு சென்று கொண்டிருந்த ராஜ் கண்ணா சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ஆற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றினார். பின்பு பணிக்குச் சென்ற அவர் காலதாமதத்திற்கு காரணம் இதுதான் என அப்போதைய காவல் கண்காணிப்பாளர் தர்மராஜிடம் தெரிவித்தபோது அவரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் இதற்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அவர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் உயிர் காக்கும் விருதுக்காக பரிந்துரை செய்யும்படி கேட்டுக் கொண்டார். அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்பையன் பிரதமரின் விருதுக்கு பரிந்துரை செய்ததையடுத்து கடந்த 2018 - 19ஆம் ஆண்டிற்கான உயிர்காக்கும் பிரதமர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 22 நபர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த காவலருக்கு ஒருவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தனது பணிக்கு மேலும் ஒரு சிறப்பை தேடித்தரும் எனவும் தனக்கு
மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்த காவலர் ராஜ் கண்ணா, இது போன்று அனைத்து காவலர்களும் எந்த நேரத்திலும் பொதுமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.