இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறதா பீஸ்ட் படம்? - தொடரும் விஜய் படத்தின் சர்ச்சைகள்
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ரிலீசுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஏற்கனவே படத்தின் 2 பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பல சாதனைகளையும் படைத்தது. இன்னும் ஒருவார காலமே ரிலீசுக்கு உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வழக்கமாக விஜய் படம் என்றாலே சர்ச்சைகளை கிளப்பாமல் இருக்காதே என எதிர்பார்த்தவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் பீஸ்ட் படம் சிக்கியுள்ளது. அதாவது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது ஷாப்பிங் மாலை தீவிரவாதிகள் கைப்பற்றி மிரட்டல் விடுப்பது போலவும், அதனை எதிர்பாராதவிதமாக மாலின் உள்ளே சிக்கியிருக்கும் ராணுவ வீரரான விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் படத்திலும் தீவிரவாதிகளுடன் நடிகர் விஜய் சண்டை போடுவது போன்ற குகை சண்டைக் காட்சிகள், தீவிரவாத அமைப்புகளை ஏவுகணைகளை லாஞ்ச் செய்து தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தியுள்ளனர் எனக் கூறி குவைத் நாட்டில் பீஸ்ட் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,அங்கு படம் வெளியாகாது எனவும் கூறப்பட்டது.
ரசிகர்களை இந்த தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம் பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்து வருகிறோம். ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், சென்னை வெள்ளம், கொரோனா காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் செய்த உதவிகளை மறந்து விட முடியாது என தெரிவித்துள்ளார்.
உண்மை நிலை இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பீஸ்ட் திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும். தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்துவரும் நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என முஸ்தபா கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டபடி படம் ரிலீசாகுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.