"பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் தமிழ்நாடு மாடலை அமைக்க வேண்டும்" - சீதாராம் யெச்சூரி
தமிழ்நாடு மாடலை பின்பற்றுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கேரளா சென்றார்.
அவருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பளித்தார்.
இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயளாலர் சீதாராம் யெச்சூரி,
“மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம். இதற்கான நடவடிக்கைகள் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும். மாநில அளவிலான கூட்டணிகளே தேசிய அளவிலான வெற்றிக்கான அடித்தளமாக இருக்கின்றன.

அந்த வகையில் தமிழ் நாட்டில் திமுக- காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளதை போன்று தேசிய அளவிலும் மார்க்சிஸ்ட் கூட்டணி அமைக்கும். இதற்காக தமிழகத்தை போல கேரளாவிலும் காங்கிரசுடன் இணைந்து போராட தயாராக உள்ளோம்.” என்று தெரிவித்தார்.
மேலும்,பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் தமிழ்நாடு மாடலை அமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.