அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு : ஹைகோர்ட் தடை நீட்டிப்பு

Tamil nadu DMK
By Irumporai Aug 04, 2022 12:26 PM GMT
Report

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்குக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அவரது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு : ஹைகோர்ட் தடை நீட்டிப்பு | Tn Minister Anitha Radhakrishnan Case

லஞ்ச ஒழிப்புத் துறை மட்டுமல்லாமல் அமலாக்கப் பிரிவும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர்ந்தது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.  

சொத்துக்கள் முடக்கம்

மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

தம்முடைய சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தமக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

தடை நீடிப்பு

இந்த மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது குறித்து அமலாக்கதுறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு : ஹைகோர்ட் தடை நீட்டிப்பு | Tn Minister Anitha Radhakrishnan Case

மேலும் இந்த வழக்கின் விசாரணையை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அமலாக்கதுறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், அமலாக்கப் பிரிவு பதில்மனுவுக்கு பதிலளிக்க தங்களது தரப்புக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்குக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். வரும் 28-ந் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.