’தமிழகத்தில் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள்’ - மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து, பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ஐஐடியில் முப்பதுக்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க கூடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இருப்பினும் இந்த நிலை மாறும் என்றும் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் சற்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் முக கவசம் தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.